ரபேல் விவகாரம்: மறு விசாரணை தேவை இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


ரபேல் விவகாரம்: மறு விசாரணை தேவை இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 4 May 2019 10:02 PM GMT (Updated: 4 May 2019 10:02 PM GMT)

ரபேல் மறுஆய்வு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. அதில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி இருக்கிறது.

புதுடெல்லி,

36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ரூ.58 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை” என கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் 14-ந் தேதி தீர்ப்பு கூறியது.

ஆனால் அடுத்த சில நாட்களில் ரபேல் முறைகேடு தொடர்பான சில ஆவணங்கள், ஊடகங்களில் கசிந்ததால், அந்த ஆவணங்களை ஆதாரங்களாக கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு டிசம்பர் 14-ந் தேதி வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மறுஆய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த மனுக்கள் கடந்த மாதம் 30-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று முறையிடப்பட்டது.

ஆனால் அதை நிராகரித்த நீதிபதிகள் மே 4-ந் தேதிக்குள் (நேற்று) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில், பாதுகாப்புத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சஞ்சய் சிங் பெயரில் 48 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பிரமாண பத்திரத்தின் ஒரு பகுதியில் மறுஆய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதற்காக மனுதாரர்கள் அளித்துள்ள காரணங்களை ஏற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பகுதியில் இந்த மறுஆய்வு மனுக்களின் மீது பத்திவாரியாக பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந் தேதியன்று அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வழங்கியுள்ள தீர்ப்பில் மத்திய அரசை குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுவித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை. மனுதாரர்கள் முன்பு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அந்த தீர்ப்பில் விடையளிக்கப்பட்டு உள்ளது. புதிய ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் எவ்வித இடைப்பேச்சுவார்த்தைக்கும் வழிவகுக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு விடுத்திருக்கும் மனுதாரர்களின் கோரிக்கை சட்டவிதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

மத்திய அரசின் கோப்புகளில் அடங்கியுள்ள ரகசிய குறிப்புகளை மனுதாரர்கள் கோரிக்கையின்படி தாக்கல் செய்ய அனுமதிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு பெரிய அளவில் ஊறு விளைவிக்கும். மேலும் இந்த கோப்புகளில் அடங்கியுள்ள குறிப்புகள் பல்வேறு நிலைகளில் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆகும். அவை இறுதியான முடிவை பிரதிபலிக்கும் வகையில் இல்லை.

மனுதாரர்கள் கூற்றுப்படி, ஆதாரங்கள் அற்ற ஊடக செய்திகள் மற்றும் கோப்புகளில் அடங்கியுள்ள அவர்களின் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்புகளின் அடிப்படையில் இறுதி முடிவு பற்றி மனுதாரர்கள் கேள்வி எழுப்ப முடியாது. அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகு திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மறுசீராய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஊடக செய்திகளின் அடிப்படையில் கோர்ட்டு முடிவெடுக்க முடியாது என்பது நிறுவப்பட்ட சட்ட விதிமுறையாகும்.

மத்திய தணிக்கை துறை விளக்கத்தின் மூலம் ரபேல் போர் விமானம் தொடர்பாக எந்த விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

ரபேல் விமானங்கள் வாங்குவது பற்றிய நடைமுறைகள், விலை நிர்ணயம், இந்திய கூட்டாளியை தேர்ந்தெடுப்பது குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் உரிய முடிவை எடுத்து உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற மிகவும் முக்கியமான விவகாரத்தில் கோர்ட்டு தலையிடுவதற்கான முகாந்திரம் எதுவும் கிடையாது.

பாதுகாப்பு துறையின் முக்கியமான ஆவணங்களை ஒருவருக்கு அளிக்குமாறு கோர்ட்டு உத்தரவிடுவது, மற்ற முக்கியமான விஷயங்களில் உரிய அமைச்சகம் அல்லது துறையில் இருந்து ஆவணங்களை திருடி அவற்றை ஊடகங்களிலோ வலைத்தளங்களிலோ பகிரங்கமாக வெளியிட வழிவகுக்கும்.

ரபேல் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் மத்திய கணக்கு தணிக்கை வாரியத்துக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. முந்தைய ஒப்பந்தத்தை விட தற்போதைய ஒப்பந்தத்தில் 2.86 சதவீதம் விலை குறைவு உள்ளதாக மத்திய தணிக்கை வாரியம் கூறி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற அன்றாட கடித பரிமாற்றங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து பிரதமர் அலுவலகம் கண்காணித்து வந்ததை, இந்த விவகாரத்தில் குறுக்கிட்டதாகவோ அல்லது இணையாக பேரங்கள் செய்ததாகவோ கருதமுடியாது.

ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற பெயரில் ஊடகங்களில் வெளியான சில ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில், திருடப்பட்ட, அறைகுறையான கோப்பு குறிப்புகளின் அடிப்படையில் மனுதாரர்கள் தீர்ப்பை மீண்டும் முழுமையாக மறுஆய்வு செய்வதற்கோ அல்லது அரசாங்கத்திடம் இருந்து ஆவணங்களை கேட்பதற்கோ முகாந்திரம் எதுவும் கிடையாது. எனவே இந்த மறுஆய்வு மனுக்கள் முற்றிலும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

புதிய ஆவணங்களின் அடிப்படையில் மறுஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியை “காவலாளியே திருடன்” என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதாக ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி எம்.பி. மீனாட்சி லேகி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கும் இந்த மறுஆய்வு மனுக்களுடன் இணைத்து நாளை விசாரிக்கப்படுகிறது.


Next Story