‘மோடி ஒரு குத்துச்சண்டை வீரர்’ - ராகுல் காந்தி தாக்கு


‘மோடி ஒரு குத்துச்சண்டை வீரர்’ - ராகுல் காந்தி தாக்கு
x
தினத்தந்தி 6 May 2019 11:00 PM GMT (Updated: 6 May 2019 9:10 PM GMT)

மோடி ஒரு குத்துச்சண்டை வீரர் என்றும், அவர் தனது பயிற்சியாளர் அத்வானியை வீழ்த்திவிட்டதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிவானி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானாவின் பிவானி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குத்துச்சண்டைக்கு புகழ்பெற்ற அந்த பகுதி, நாட்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் களை உருவாக்கி இருக்கிறது.

எனவே இதை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியை குத்துச்சண்டை வீரராக ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

56 அங்குல மார்பு கொண்டவர் என தனக்குத்தானே பெருமைபட்டுக்கொள்ளும் ஒரு குத்துச்சண்டை வீரர் நரேந்திர மோடி, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் துயரம், ஊழல் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக குத்துச்சண்டை களத்தில் இறங்கினார்.

ஆனால் பிரச்சினைகளை எதிர்க்க களமிறங்கிய இந்த குத்துச்சண்டை வீரர் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் ஏழைகள், பின்தங்கிய பிரிவினர், விவசாயிகளைத்தான் தாக்கி இருக்கிறார். தான் யாரை எதிர்க்கிறோம் என்பதை புரிந்துகொள்ளவும் அவர் தவறிவிட்டார். இந்த குத்துச்சண்டை வீரர் வேண்டாம் என மக்கள் தற்போது பேசத்தொடங்கி உள்ளனர்.

நரேந்திர மோடி குத்துச்சண்டை களத்தில் இறங்கியபோது அவரது பயிற்சியாளர் அத்வானிஜி மற்றும் கட்காரி போன்ற சக வீரர்களும் அங்கிருந்தனர். களத்தில் இறங்கியதும் மோடி செய்த முதல் வேலை என்னவென்றால், தனது பயிற்சியாளரான அத்வானியின் முகத்தில் குத்துவிட்டதுதான்.

அத்வானிக்கு குத்துவிட்ட பிறகு, பணமதிப்பு நீக்கம், கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) போன்றவற்றால் சிறு வணிகர்களை மோடி நாக்-அவுட் செய்துவிட்டார். இந்த முடிவுகள் ஏழைகளை எவ்வாறு பாதித்தது? என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும்.

அதன்பிறகும் நமது குத்துச்சண்டை வீரரான பிரதமர் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. அடுத்ததாக கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்ட விவசாயிகளுக்கு குத்துவிட்டார்.

இப்படி வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கப்போய், தனது பயிற்சியாளர் அத்வானியை வீழ்த்திவிட்டு நிற்கிறார், மோடி. யாரை எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் செயல்படும் இந்த குத்துச்சண்டை வீரரை பார்த்து மக்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

தற்போது நாக்-அவுட் செய்யப்பட்டு இருக்கும் இந்த குத்துச்சண்டை வீரர், களத்தில் நின்று பொய்களை சொல்வதுடன் காற்றில் குத்துவிட்டுக்கொண்டு இருக்கிறார். அவரை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Next Story