3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2019 5:45 AM IST (Updated: 7 May 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், சபாநாயகரின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த மாதம் 30-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரத்தில் தி.மு.க. சார்பில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க் கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சபாநாயகர் 7 நாட்களுக்குள் விளக்கம் கோரி உள்ளார். எங்கள் பதிலுக்கு அவர் காத்து இருக்காமல் எங்களை தகுதி நீக்கம் செய்யக்கூட வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு இப்படி நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. அவர் பாரபட்சமாக செயல்படுகிறார். அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. மனு அளித்து உள்ளது.

ஏற்கனவே துணை முதல்- அமைச்சர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான 10 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை இதுவரை தகுதிநீக்கம் செய்யவில்லை.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. எனவே சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், சபாநாயகர் தனபால் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

அத்துடன், மனுவின் மீது பதில் அளிக்க சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த விசாரணை மொத்தத்தில் ஒன்றரை நிமிடத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தடை உத்தரவு காரணமாக, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் சபாநாயகர் ப.தனபால் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story