ஜெய் ஸ்ரீராம் விவகாரம்: ஒரு கோவிலை கட்டமுடியவில்லை மோடியை விளாசிய மம்தா பானர்ஜி
ஜெய் ஸ்ரீராம் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி, ஒரு கோவிலை கட்டமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடுமையான மோதல் பிரசாரம் நடக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். சமீபத்தில் மம்தா பானர்ஜி பிரசாரத்திற்கு சென்றபோது அவருடைய கார் செல்லும் வழியில் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அப்போது உடனடியாக காரிலிருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அவர்களை அருகே அழைத்தார். அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் இருதரப்பிலும் முன்வைக்கப்படுகிறது.
தேர்தல் நடக்கும் போதும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது.
இந்நிலையில், விரக்தியிலிருக்கும் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஜார்கிராமில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். நான் இன்று இங்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால், அவர் என்னை சிறையில் தள்ள முடியுமா? மம்தா பானர்ஜி தான் பிரதமர் ஆவதற்காக மகாகூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது பிரதமர் கனவு ஏற்கனவே பொய்த்துவிட்டது. அவரால் மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகள் கூட வெல்ல முடியாது என்றார்.
ஜெய் ஸ்ரீராம் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி, உங்களால் ஒரு கோவிலை கட்டமுடியவில்லையே என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை மாற்ற நினைக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் வரும்போது எல்லாம் ராமபிரான் பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்ட் ஆகிவிடுகிறாரா?. எங்கள் மாநிலத்தில் பான்கிம் சந்திர சட்டோபாத்யாயவால் முழங்கப்பட்ட வந்தேமாதரம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழங்கிய ஜெய் ஹிந்த் ஆகிய மந்திரங்களைத்தான் மேற்கு வங்க மக்கள் முழங்குவார்கள். "உங்கள் முழக்கத்தை நாங்கள் ஏன் ஏற்கவேண்டும்? மோடி மற்றும் பா.ஜனதாவின் பெயரை நாங்கள் முழங்கமாட்டோம். அவர்கள் வங்காளத்தின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.
நாங்கள் துர்கா பூஜை செய்யும்போது ஜெய் மாதா துர்கா என்ற மந்திரத்தை முழங்குவோம். நாங்கள் காளி பூஜையை செய்யும் போது ஜெய் மாதா காளி என்ற மந்திரத்தை முழங்குவோம். பா.ஜனதாவை போன்று நாங்கள் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட முழக்கத்தை உருவாக்க மாட்டோம். மேற்கு வங்கத்தை பொருத்தவரை எங்களுடைய அரசு தக்ஷ்ணேஷ்வர், தாராபித் மற்றும் கன்காளிதலா ஆகிய பகுதிகளில் உள்ள காளி கோவிலை புதுப்பித்துள்ளது.
ஆனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பா.ஜனதாவால் ஒரு கோவிலை கட்டமுடியவில்லை. 5 ஆண்டுகளாக ஜெய் ஸ்ரீராம் என முழங்கி வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஜெய் ஸ்ரீராம் மந்திரத்தை மட்டும் முழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முயற்சி செய்கிறார்கள் என பேசியுள்ளார்.
Related Tags :
Next Story