பானி புயல் பாதிப்பு: ஒடிசா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி - பினராய் விஜயன் அறிவிப்பு


பானி புயல் பாதிப்பு: ஒடிசா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி - பினராய் விஜயன் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2019 3:53 PM IST (Updated: 8 May 2019 3:53 PM IST)
t-max-icont-min-icon

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.  அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. 

அதில், பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டிடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ரயில், விமானம் , தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின்விநியோகம் போன்ற சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில்,  

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தனது 1 வருட ஊதியத்தை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இந்நிலையில் பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகையாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story