ஒடிசாவில் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு -மீட்பு பணிகள் தீவிரம்
ஒடிசாவில் பானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
வங்கக்கடலில் உருவான பானி புயல் ஒடிசாவில் கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடியது. மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 12 லட்சம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த புயலில் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என கணக்கிடப்பட்டாலும், நேற்று வரை அங்கு புயல் தொடர்பான சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. அதேநேரம் புயலின்போது பூரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 பேர் உயிரிழந்த தகவல் வெளியானது. இதன்மூலம் பானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்திருக்கிறது.
பல மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய பானி புயலால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பானி புயலால் மாநிலத்தின் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகளை சீரமைக்கும் பணிகளை ஒடிசா அரசு முடுக்கி விட்டுள்ளது. புயலின் போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றில் மாநிலத்தில் சுமார் 1.53 லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல மாவட்டங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.
எனவே அந்த பகுதிகளில் மின்கம்பங்களை சீரமைத்து மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக ஆந்திரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இரவு–பகலாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே புயல் பாதித்த இடங்களில் குடிநீர் வினியோகிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story