திரிபுரா மேற்கு தொகுதியில் 160 ஓட்டுச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது: 12-ந் தேதி மறுதேர்தலுக்கு உத்தரவு


திரிபுரா மேற்கு தொகுதியில் 160 ஓட்டுச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது: 12-ந் தேதி மறுதேர்தலுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 8 May 2019 9:45 PM GMT (Updated: 8 May 2019 8:44 PM GMT)

திரிபுரா மேற்கு தொகுதியில் 160 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும், 12-ந் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திரிபுரா மேற்கு, திரிபுரா கிழக்கு என்ற 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 11-ந் தேதி திரிபுரா மேற்கிலும், 18-ந் தேதி திரிபுரா கிழக்கிலும் வாக்குப்பதிவு நடந்தது.

இதில், திரிபுரா மேற்கு தொகுதியில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. பா.ஜனதாவினர், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டன.

இதையடுத்து, திரிபுரா மேற்கு தொகுதியில் 26 சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 160 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

அனைத்து சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து இம்முடிவுக்கு வந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இந்த 160 வாக்குச்சாவடிகளிலும், இம்மாதம் 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுடன் சேர்த்து, அங்கு மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது.


Next Story