ராகுல் காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பில் முடிவு: எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை


ராகுல் காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பில் முடிவு: எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 9:15 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை ‘விவிபாட்’ எந்திரத்தில் பதிவான 50 சதவீத ஒப்புகை சீட்டுகளுடன் எண்ணி சரிபார்க்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றிருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேட்டி அளித்தனர். தேர்தல் கமிஷனை மீண்டும் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்நிலையில், டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்தார். அப்போது, ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

நடந்து முடிந்த 5 கட்ட நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம், ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் முடிவு குறித்த கணிப்புகள் ஆகியவை பற்றி ராகுல் காந்தியுடன் விவாதித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 23-ந்தேதி நடக்கிறது. எனவே, அதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தலாம் என்ற கருத்தை சந்திரபாபு நாயுடு முன்வைத்தார்.

21-ந்தேதி, டெல்லியில் இந்த கூட்டத்தை நடத்தலாம் என்று அவர் கூறினார். அதில், தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையை அணுகுவது பற்றியும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, மம்தா பானர்ஜியுடன் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக, சந்திரபாபு நாயுடு மேற்கு வங்காளத்துக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story