பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிராக, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த 14 பேர்களில் மூன்று பேரின் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப், மாலா ஆகியோரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணனும் சுப்ரீம் கோர்ட்டில் அதே ஆண்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் தமிழக அரசு, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நலனை மட்டுமின்றி அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மனநிலை மற்றும் சமூகம் குறித்தும் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இந்த குற்றவாளிகளை விடுதலை செய்வதாக எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது ஆகும்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது மற்றும் அவர்களை விடுதலை செய்வது போன்றவை கவர்னர் மற்றும் ஜனாதிபதியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது ஆகும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழக ஆளுனரின் பரிசீலனையில் இந்த வழக்கு இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
Related Tags :
Next Story