1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் பற்றி மத்திய அரசு ஆய்வு
சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 940 இந்திய காவல் துறை (ஐ.பி.எஸ்.) பணியிடங்கள், ஒப்புதல் அளிக்கப்பட்டவை ஆகும். இதில் 3 ஆயிரத்து 972 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில், சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது. அவர்களின் பணி பதிவேடுகளை கடந்த 2016–ம் ஆண்டில் இருந்து 2018–ம் ஆண்டுவரை ஆய்வு செய்தது. அவர்கள் திறமையாக செயல்படுகிறார்களா என்று கண்காணித்தது.
இதில், திறமைக்குறைவாக இருந்த 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு பெறுமாறு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அகில இந்திய பணி விதிகளின்படி, இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
திறமைக்குறைவாக செயல்படுபவர்கள், தங்களை மேம்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் அல்லது பொதுநலன் கருதி பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் 3 மாத நோட்டீஸ் கொடுத்தோ அல்லது 3 மாத ஊதியம் கொடுத்தோ நீக்கப்படுவார்கள். இதுபோல், கடந்த 2015–ம் ஆண்டில் இருந்து 2018–ம் ஆண்டுவரை, ஆயிரத்து 143 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில், பணித்திறன் இல்லாத 4 அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறுமாறு பரிந்துரை செய்தது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.
Related Tags :
Next Story