தேசிய செய்திகள்

சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்க மறுத்ததும், சந்திரபாபு நாயுடுவின் முட்டுக்கட்டையும்! + "||" + Chandrasekara Rao When Stalin refused to meet, Chandrababu Naidu's stumbling block

சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்க மறுத்ததும், சந்திரபாபு நாயுடுவின் முட்டுக்கட்டையும்!

சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்க மறுத்ததும், சந்திரபாபு நாயுடுவின் முட்டுக்கட்டையும்!
வெறும் 17 எம்பிக்களை கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய மாநில முதல்வர் 543 எம்பிக்களை கொண்ட பெரிய தேசத்தின் பிரதமராக வீற்றிருக்க ஆசைப்படுவதோடு அதற்கான முயற்சியிலும் தானே களம் இறங்கி செயல்படுவதை இந்திய ஜனநாயகத்திற்கான பெருமையாக கொள்ளலாம். தேசிய கட்சிகள் வலு இழந்திருப்பதின் அடையாளமாகவும் கருதலாம்.
ராகுல் காந்தியை முதன் முதலாக பிரதம மந்திரி வேட்பாளராக தங்கள் மெகா கூட்டணியின் பிரசார மேடையில் அறிவித்தவரான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க முயன்ற தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவை சற்று தொலைவில் நிறுத்திவிட்டார். ஏனெனில், அவர் பா.ஜ.க.வின் சார்பாக செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான்!

ஒவ்வொரு வாக்குப்பதிவு முடிவுகளின் போதும் கணிப்புகள் மாறியவண்ணமுள்ளது. இது அரசியல் களத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தி வருகிறது! மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே ஒரு மாற்று அணியை நிறுவலாம் என்று ஸ்டாலினை சந்திக்க முயற்சி எடுத்த கே.சி.ஆரை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருப்பதாக கூறி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைதேர்தல் மே 19-ல் 7-ம் கட்ட பதிவாக நடைபெற உள்ளதில் தீவிரம் காட்டி வரும் ஸ்டாலின் கே.சி.ஆரின் வேண்டுகோளை ஏற்க முடியாதவரானார்.

நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றி மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தவும், ஆட்சி அமைக்கவும் போதுமான எண்ணிக்கையிலான தொகுதிகள் தி.மு.க.விற்கு தேவைப்படுகிறது. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடந்து முடிந்துவிட்டது. 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தற்போது அ.தி.மு.க.விற்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க.விற்கோ 89 தொகுதிகளும், காங்கிரசிற்கு 8 தொகுதிகளும் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் உள்ளன. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவி ஆட்சி அமைக்கவோ அல்லது ஆட்சியை தக்க வைக்கவோ எந்த ஒரு கட்சிக்கும் 118 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.

சந்திரசேகர ராவ், “தேசிய அரசியலில் ஒரு மாற்றம் தேவை” என்ற முழக்கத்துடன் மம்தா, மாயாவதி, நவீன் பட்நாயக், தேவகவுடா ஆகிய தலைவர்களை சந்தித்து வருவதன் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை! காரணம், தி.மு.க.வை பொறுத்தவரை அது காங்கிரஸ் அணியில் உறுதியாக இடம் பெற்றுள்ள கட்சி மாத்திரமல்ல, ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய கட்சியாகும். தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்த வகையில், “சந்திரசேகர ராவ் முயற்சியின் பின்னணியில் பா.ஜ.க. இருக்கலாம். காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகளின் ஆதரவில் ஒரு வலுவான ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்ற பா.ஜ.க.வின் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கவே அவர் பாடுபடுகிறார்” என்கிறார்கள்!

தேசிய அளவில் இருபெரும் அணிகளாக பா.ஜ.க., காங்கிரஸ் அறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பா.ஜ.க. ஆதரவு பா.ஜ.க. எதிர்ப்பு என்பதே இந்த தேர்தலின் மைய பொருளாக விளங்குகிறது.

இங்கே தமிழகத்தை எடுத்து கொண்டாலுமே கூட, பா.ஜ.க. எதிர்ப்பு என்ற அம்சம் தான் தி.மு.க. தலைமையிலான கட்சிகளான கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை ஒரே அணியாக இணைத்துள்ளது.

இன்னும் தெளிவாக பார்க்க வேண்டுமானால், மதத்தை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை, மத நல்லிணக்க அணுகுமுறை ஆகிய இரு கொள்கைக்கு இடையிலான மோதலே இந்த தேர்தலின் முக்கிய விவாதப் பொருளானது.

தேசிய அளவில் பிரதமருக்கான மூன்றாவது அணி வேட்பாளர்களாக பல பெயர்கள் அடிபடுகிறது. மாயாவதி வெளிப்படையாக தன்னை முன்னிலைபடுத்தி பேசி வருகிறார். அவருக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு காட்டி வருகிறார். இந்த இரு கட்சிகளின் கூட்டணி உத்தரபிரதேசத்தில் 60 முதல் 70 தொகுதிகளை கைபற்றுமானால், மாயாவதியின் ஆசைக்கு ஒரு வடிவம் கிடைக்க வாய்ப்புண்டு!

மம்தா பானர்ஜியும் பிரதமர் கனவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற 34 தொகுதிகளை மீண்டும் அவர் தக்க வைக்க முடிந்தாலே கூட அவரும் களத்தில் குதிக்கும் தகுதியை பெற்றுவிடுவார். இன்னொருபுறம் தேவகவுடாவும் மறு வாய்ப்பு கிடைக்குமா என்று மவுனித்திருக்கிறார். சரத்பவாருக்கும் இந்த சஞ்சலம் இல்லாமலில்லை!

இந்த போட்டியில் இப்போது புதிதாக நுழைந்திருப்பவர் கே.சி.ஆர். என்றழைக்கப்படும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

மாயாவதி, மம்தா, சரத்பவார் போன்றவர்களாவது பெரிய மாநிலத்தின் தலைவர்கள் மற்றும் தேசிய அளவில் கட்சியை ஸ்தாபித்துள்ளவர்கள். ஆனால், சந்திரசேகர ராவ் கட்சியோ தெலுங்கானாவை விட்டால், ஆந்திராவில் கூட செல்வாக்கில்லாத கட்சியாகும்! ஆனாலும், அவர் எப்படி இந்த முயற்சியில் ஈடுபட முடிகிறது என்பது ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது.

ஏனெனில், தெலுங்கானாவை பொறுத்தவரை காங்கிரஸ் தான் கே.சி.ஆர். கட்சிக்கு பலமான போட்டி கட்சி. தெலுங்கானா தனி மாநிலம் கிடைத்தால் காங்கிரசோடு தன் கட்சியை இணைத்துவிடுவேன் என்றெல்லாம் சொல்லி வந்த கே.சி.ஆர். கடைசியில் காங்கிரசிற்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அத்துடன், “காங்கிரஸ் ஒரு மோசடி கட்சி என்றும், ராகுல் ஒரு பெரிய கோமாளி” என்றும் விமர்சித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகளை கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் யாரும் உணர முடிந்த விஷயம் அவர் மோடிக்கு இணக்கமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரது கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே, இப்போதைக்கு கே.சி.ஆரின் மூன்றாவது அணி முயற்சிக்கு போதுமான வரவேற்பு கிடைக்காது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. எனினும், தன் மீது பா.ஜ.க. ஆதரவாளன் என்ற முத்திரை விழுவதை தவிர்க்கும் விதமாக கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்து முன்னேறிக்கொண்டுள்ளார் கே.சி.ஆர்.!

இதற்கிடையே கே.சி.ஆரின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அவரது போட்டியாளரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வரும் 21-ந்தேதி ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் நாங்கள் மூன்று வழிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

முதலாவது காங்கிரஸ் தலைமையை ஏற்று ஆட்சி அமைப்பது!

இரண்டாவது காங்கிரசையும் இணைத்துக்கொண்ட ஒரு ஆட்சி!

மூன்றாவது, காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தரத்தக்க ஒரு ஆட்சி!

என்பதே தங்களது திட்டம் என்பதை சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் பா.ஜ.க.வை திட்டவட்டமாக தவிர்ப்பது என்ற நோக்கமுள்ள மாநில கட்சிகளின் கூட்டமாக இது அமையும் என்பது தெளிவாகிறது!தொடர்புடைய செய்திகள்

1. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
2. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி
பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
3. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
4. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
5. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.