ஆபாச வாசகங்களுடன் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக சர்ச்சை: கம்பீருக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு
ஆபாச வாசகங்களுடன் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் குற்றம் சாட்டியிருந்தார்.
புதுடெல்லி,
கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், ஆம் ஆத்மி வேட்பாளராக அடிஷியும் போட்டியிடுகிறார்கள். 12-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அடிஷியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்கள், சில அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்தித்தாள்களுடன் இணைத்து வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவுடன் இணைந்து அடிஷி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கதறி அழுதார். கவுதம் கம்பீர் தான் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அதற்கு கவுதம் கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இச்செயலில், தான் ஈடுபட்டதாக நிரூபித்தால், போட்டியில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கவுதம் கம்பீருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-கவுதம் கம்பீரை தொடர்புபடுத்தி நேற்று வெளியான குறிப்பை கேட்டு நான் அதிர்ச்சியுற்றேன். கம்பீரை நான் நன்கு அறிவேன். எந்த பெண்ணையும் இழிவாக அவர் ஒருபோதும் பேசியது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story