தேசிய செய்திகள்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம் + "||" + Rahul is only responsible if Modi comes to power again - Arvind Kejriwal

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்
மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு என்று அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக கூறினார்.
புதுடெல்லி,

டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித்தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:-


காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும், கேரளாவில் இடதுசாரி கூட்டணிக்கும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், ஆந்திராவில் தெலுங்குதேசத்துக்கும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால், அதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான் பொறுப்பு ஆவார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் அது பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிடுவதாக தோன்றவில்லை. அது, எதிர்க்கட்சிகளை எதிர்த்துத்தான் போட்டியிடுவதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு அழிவுசக்தியாக செயல்படுவதாக தோன்றுகிறது.

முக்கிய துறைகளில் எதுவும் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் தோல்வி கண்டுள்ளார். அவரது தேசியத்துவம் போலியானது. அது நாட்டுக்கு ஆபத்தானது.

அவர் நாட்டுக்கு இதைச் செய்தேன் என்று காட்டுவதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், ஓட்டு வாங்குவதற்கு பாதுகாப்பு படைகளை பயன்படுத்துகிறார்.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சியை தக்க வைக்கப்போவது இல்லை. எங்களது ஒரே நோக்கம், மீண்டும் பதவிக்கு வருவதில் இருந்து மோடியையும், அமித் ஷாவையும் தடுத்து நிறுத்துவதுதான். அவர்கள் இருவரையும் தவிர யாருக்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

டெல்லியில் எங்கள் கட்சி நல்லதொரு வெற்றியை பெறும்.

ஒரு மாதத்துக்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தல் கடுமையான போட்டியாக இருக்கும் என்றுதான் நான் கருதினேன். ஆனால் கடந்த 10 நாட்களாக அதிரடியாக நிலைமை மாறி விட்டது. 2015-ம் ஆண்டு நாங்கள் 67 இடங்களில் வெற்றி பெற்றது போன்றதொரு சூழல் உருவாகி இருப்பதைப் பார்க்கிறேன். 7 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டில் மோடியின் பெயரால் ஓட்டு கேட்கிறது. எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் கல்வி, சுகாதாரம், குடிநீர் வினியோகம், மின்கட்டண குறைப்பு போன்று மக்களுக்கு செய்துள்ள பணிகளின் அடிப்படையில் ஓட்டு கேட்கிறோம்.

நான் பள்ளிகளை திறந்தேன், ஆஸ்பத்திரிகளை திறந்தேன் என்று மோடியால் கூற முடியாது. மின் கட்டணத்தை குறைத்தேன் என்றும் சொல்ல இயலாது. குடிநீர் வினியோகத்தை உறுதிசெய்தேன் என்றும் கூற இயலாது. அவர் எல்லா துறைகளிலும் தோல்வி கண்டிருக்கிறார். மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை வருகிற 27-ந் தேதி முதல் தொடங்குகிறது
தூத்துக்குடி-பெங்களூரு இடையே வருகிற 27-ந் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது.
2. மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் தனிகட்சி தொடங்குவது எப்போது? என்று விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.