ஹெலிகாப்டரின் கதவை சீர் செய்ய பைலட்டுக்கு உதவிய ராகுல் காந்தி..!


ஹெலிகாப்டரின் கதவை  சீர் செய்ய பைலட்டுக்கு உதவிய ராகுல் காந்தி..!
x
தினத்தந்தி 11 May 2019 4:57 AM GMT (Updated: 11 May 2019 4:57 AM GMT)

ஹெலிகாப்டரின் கதவை சீர் செய்ய பைலட்டுக்கு ராகுல் காந்தி உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

புதுடெல்லி, 

பாராளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 6 ஆம் கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒரே நாளில் வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய ஏதுவாக ஹெலிகாப்டர் மூலம் செல்வதை முக்கிய தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

அந்த வகையில், ராகுல் காந்தியும் ஹெலிகாப்டர் மூலம் முக்கிய இடங்களுக்கு சென்று அங்கிருந்து வாகனம் மூலமாக பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் கதவில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்ய பைலட்டுக்கு உதவி செய்யும் காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. ஹெலிகாப்டரில் கதவில் உள்ள ரப்பரை, சரியாக பொருத்தும் பணியில் ஹெலிகாப்டர் பைலட் ஈடுபடுகிறார். பைலட்டுக்கு ராகுல் காந்தியும் உதவி புரிகிறார். 

ராகுல் காந்தியின் உடன் வந்த குழுவில் உள்ள ஒருவர் பேஸ்புக்கில் இதை நேரலையாக ஒளிபரப்பு செய்தார். ராகுல் காந்தியின் எளிமையை காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ராகுல் காந்தியும், ஹெலிகாப்டரை சீர் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

அதில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள உனா பகுதியில் ஹெலிகாப்டரில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாங்கள் ஒருங்கிணைந்து இப்பிரச்சினையை விரைவாக சீர் செய்து விட்டோம். பயப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
 


Next Story