பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மாயம்
கோவாவில் பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மறுவாழ்வு மையத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.
பனாஜி,
கோவாவில் பனாஜி சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவு வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அடானேசியோ மோன்செரட்டே போட்டியிடுகிறார். முன்னாள் மந்திரியான இவர் மீது கடந்த 2016ம் ஆண்டு மே மாதத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்தபொழுது இளம்பெண்ணுக்கு வயது 17.
இதன்பின்னர் அடானேசியோவுக்கு எதிராக வடக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், மறுவாழ்வு மையம் ஒன்றில் தங்கி இருந்த அந்த இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். அவர் ஆடை வடிவமைப்பு பற்றி படித்து வந்துள்ளார்.
இதுபற்றி அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஆடா வீகாஸ் மற்றும் இளம்பெண் படித்து வந்த கான்வென்டின் அதிகாரிகள் சிலர் கடந்த ஏப்ரல் 28ந்தேதி போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
முக்கிய பிரமுகர் தொடர்புடைய வழக்கு என்பதனால் அவர் அதிகம் அச்சத்துடன் காணப்பட்டார் என வீகாஸ் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கடத்தல் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story