போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் - சிபிஐ


போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் - சிபிஐ
x
தினத்தந்தி 16 May 2019 3:39 PM GMT (Updated: 16 May 2019 3:39 PM GMT)

போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் என சிபிஐ தெரிவித்துள்ளது.


1986-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சுவீடன் நாட்டில் உள்ள போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,437 கோடிக்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்திய அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிபிஐ விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு குற்றம்சாட்டப்பட்டு இருந்த அனைவரையும் விடுதலை செய்து 2005–ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. 13 ஆண்டுகள் தாமதமாக மேல்முறையீடு செய்து இருப்பதாக கூறி சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில், போபர்ஸ் ஆயுத பேரம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இதுதொடர்பான மனு கடந்த டிசம்பர் 4–ந் தேதி விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ. அனுமதி கோருவது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆனால் போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் என சிபிஐ தெரிவித்துள்ளது.
 
 சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் நிதின் வகாங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மைக்கேல் ஹெர்ஷ்மேன் என்பவர் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில், போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள கோர்ட்டின் அனுமதி கட்டாயம் அல்ல என்பதால், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. எனவே போபர்ஸ் பீரங்கி பேர விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறினார். 

Next Story