ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்


ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 8:49 PM GMT)

ராஜஸ்தானில் கணவர் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தலித் இளம்பெண்ணை அவருடைய கணவர் கண்முன்னே 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கற்பழித்தனர். அவர்களில் ஒருவன் அந்த காட்சியை வீடியோவாக படம் பிடித்தான். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக 2-ந் தேதி தான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கற்பழிப்பு சம்பவத்துக்கும், போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆல்வாருக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். அவருடன் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்று இருந்தனர்.

பின்னர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முதல்-மந்திரி அசோக் கெலாட்டை உடனடியாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என்று கூறினேன்.

ராஜஸ்தானில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கவில்லை. எனினும் இதனை சகித்து கொண்டிருக்க முடியாது. சிலர் இந்த சம்பவத்தை அரசியல் ஆக்குகிறார்கள். நான் அரசியல் காரணங்களுக்காக இங்கு வரவில்லை. இது உணர்ச்சிபூர்வமான விஷயம்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story