வாரணாசி தொகுதியில் மோடி புத்தகங்களுக்கு கடும் கிராக்கி


வாரணாசி தொகுதியில் மோடி புத்தகங்களுக்கு கடும் கிராக்கி
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 8:58 PM GMT)

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் புத்தகங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மோடி பற்றிய புத்தகங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ‘தி ரியல் மோடி’, ‘நரேந்திர மோடி’, ‘மகாத்மா காந்தி முதல் மோடி வரை’ போன்ற புத்தகங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

இந்தி மொழி புத்தகமாக ‘தி ரியல் மோடி’ ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. தற்போது வாரணாசி தேர்தல் ஜூரத்தில் இந்த புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையானது.

‘நரேந்திர மோடி’ என்ற புதிய புத்தகம், வழக்கமான புத்தக வடிவில் இல்லாமல் மோடியின் ‘கட்-அவுட்’ போல் உருவாக்கப்பட்டு உள்ளது. 11 அங்குலம் உயரமும், மோடியின் வயதை குறிக்கும் வகையில் 68 பக்கங்கள் கொண்டதாகவும் இந்த புத்தகம் இருக்கிறது. இதில் ஒரு பகுதியில் ஆங்கிலத்திலும், மற்றொரு பகுதியில் இந்தியிலும் எழுதப்பட்டு உள்ளது. மோடியின் உரையில் இடம்பெற்ற பொன்மொழிகள், கருத்துகள் ஆகியவற்றை அச்சடித்து வெளியிட்டு இருக்கின்றனர். இந்த புத்தகமும் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

மோடி பற்றிய அனைத்து புத்தகங்களும் விற்று தீர்ந்து விட்டதால், அதிக அளவில் புத்தகங்களை பெறுவதற்கு முயற்சி எடுத்து வருவதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story