தேசிய செய்திகள்

விதிமுறை மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைதேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்துவேறுபாடு + "||" + Disagreement between Election Commissioners

விதிமுறை மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைதேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்துவேறுபாடு

விதிமுறை மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைதேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்துவேறுபாடு
பிரதமர் மோடி மீதான புகார்கள் குறித்து முடிவு எடுத்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7-வது இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது.

தேர்தல் கமிஷன் மீது புகார்

இந்த சூழலில், தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பி வருகின்றன.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் சொல் கிறபடிதான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் முக்கிய புகார் ஆகும்.

மோடிக்கு சலுகை?

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது எழுந்த புகார்களில், அவர்களுக்கு சலுகை காட்டி ‘குற்றமற்றவர்கள்’ என்று தேர்தல் கமிஷன் விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் எதிர்க் கட்சி தலைவர்கள் மீதான நடத்தை விதிகள் புகார்களில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொள்கிறது எனவும் கருத்து எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த வன்முறையை காரணம் காட்டி, அந்த மாநிலத்தில் மட்டும் ஒரு நாள் முன்னதாக பிரசாரத்தை தேர்தல் கமிஷன் முடிவுக்கு கொண்டு வந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

எதிர்காலத்தில் தேர்தல் கமிஷன் பதவி நியமன நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

கருத்து மோதல்

பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த 5 வெவ்வேறு புகார்கள் மீதான முடிவுகளில், தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா மாறுபட்ட முடிவை கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இப்போது 3 உறுப்பினர் களை கொண்ட இந்திய தேர்தல் கமிஷனில், உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதிலும், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவும், தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திராவும் பெரும்பான்மை தரப்பாகவும், மற்றொரு தேர்தல் கமிஷனரான அசோக் லாவசா சிறுபான்மை தரப்பாகவும் இருந்திருப்பதும், அவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம்

இதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு, கடந்த 4-ந் தேதி தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா எழுதிய கடிதமே ஆதாரமாக அமைந்துள்ளது.

அவர் அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

சிறுபான்மை முடிவுகள் பதிவு செய்யப்படுவது இல்லை என்கிறபோது, நான் தேர்தல் கமிஷனின் முழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

எனது முடிவுகளை பதிவு செய்யாததால், நான் தேர்தல் கமிஷனின் விவாதங்களில் பங்கு எடுப்பது அர்த்தமற்றது.

கவனிக்கப்படாத குறிப்புகள்

எனது முடிவுகளை பதிவு செய்வதின் மூலம் தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கு பிற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாக நான் பரிசீலிக்க வேண்டியதிருக்கிறது.

அனைத்து முடிவுகளையும் பதிவு செய்வதில் வெளிப் படைத்தன்மை தேவை என்பது தொடர்பான எனது குறிப்புகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. இதுதான், (தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான) புகார்கள் குறித்த விவாதங்களில் எனது பங்களிப்பை விலக்கிக்கொள்ளுமாறு செய்து விட்டன.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.