குஜராத் கோயிலில் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 இந்து மகா சபை தொண்டர்கள் கைது


குஜராத் கோயிலில் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 இந்து மகா சபை தொண்டர்கள் கைது
x
தினத்தந்தி 20 May 2019 3:19 PM GMT (Updated: 20 May 2019 3:19 PM GMT)

குஜராத்தில் கோயிலில் நாதுராம் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய இந்து மகா சபை தொண்டர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரத்,

இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, நாடு விடுதலை பெற்றபின்னர் நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்.  மகாராஷ்டிராவில் புனே பகுதியில் அமைந்த பராமதி என்ற இடத்தில் கடந்த 1910ம் ஆண்டு மே 19ந்தேதி பிறந்தவர் கோட்சே.

இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் லிம்பியாயத் பகுதியில் உள்ள சூரியமுகி அனுமன் கோவிலில் இந்து மகா சபையை சேர்ந்த சிலர் கோட்சே பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.  அவர்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோட்சே புகைப்படம் வைத்து அதனை சுற்றி விளக்கேற்றி உள்ளனர்.

இதன்பின் அவர்கள் இனிப்புகளை ஒருவருக்கொருவர் அளித்தும், கோவிலில் பஜனை பாடல்களை படித்தும் உள்ளனர்.  இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.  இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர்.  அவர்கள் குடிமகன்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என்றும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் கூறிய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story