மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன : எதிர்க்கட்சி புகாருக்கு தேர்தல் கமி‌ஷன் பதில்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன : எதிர்க்கட்சி புகாருக்கு தேர்தல் கமி‌ஷன் பதில்
x
தினத்தந்தி 21 May 2019 11:30 PM GMT (Updated: 21 May 2019 10:26 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன என்று எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாருக்கு தேர்தல் கமி‌ஷன் பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ண இருக்கும் நிலையில், சில எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நேற்று தேர்தல் கமி‌ஷனில் புகார் தெரிவித்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், சில எந்திரங்கள் தனியார் வாகனங்கள் மூலம் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் கொண்டுசெல்லப்படுவது போலவும் பல வீடியோக்கள் 2 நாட்களாக வெளியாகி வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதற்கு முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்று புகாரில் அவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கு தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபாட் கருவிகளும் பாதுகாப்புடன் உரிய பாதுகாப்பு அறைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அந்த அறை வேட்பாளர்கள், மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் இரட்டை பூட்டு போடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவடையும் வரை அவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகும். பாதுகாப்பு அறைகளை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாத்து வருகிறார்கள்.

இதுதவிர வேட்பாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் அந்த அறை முன்பு 24 மணி நேரமும் கண்காணிப்புடன் உள்ளனர். ஓட்டுகள் எண்ணும் நாளில் அந்த அறைகள் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும். அதுவும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

ஓட்டுகள் எண்ணத்தொடங்குவதற்கு முன்னதாக அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வரிசை எண், சீல், முகவரி சீட்டு ஆகியவைகள் கட்சி முகவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் காண்பிக்கப்படும். இந்த நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து 93 முறை அவர்கள் தேர்தல் கமி‌ஷனை சந்தித்தபோதும் கூறப்பட்டுள்ளது.

இத்தனை பாதுகாப்பு, நடைமுறைகளையும் தாண்டி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலோ, விவிபாட் கருவிகளிலோ தவறு செய்திருக்க முடியும் என்றால் அது பாராட்டுக்குரியது.

தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் காணப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களுக்கும் தொடர்பு இல்லை. அவை பயன்படுத்தப்படாத கூடுதல் (ரிசர்வ்) வாக்குப்பதிவு எந்திரங்கள்.

இதில் ஏதாவது தவறு நடந்தாலோ, ஏன் பயன்படுத்தப்படாத கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் தவறாக கையாளப்பட்டு இருந்தாலும் முழுமையாக விசாரணை நடத்தி, உரிய அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story