மோடி மீண்டும் பிரதமர் என்றால் வாக்குப்பதிவு எந்திரம் மீது நம்பிக்கை இல்லையா? எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா தாக்கு
நீங்கள் வெற்றிபெற்ற போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நன்றாக இருந்தது. மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார் என்றதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தேர்தல் கமிஷனில் நேற்று 22 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து புகார் செய்தனர். இதுகுறித்து பா.ஜனதா தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்து வருமாறு:–
மம்தா பானர்ஜி 2 முறை மேற்குவங்காள முதல்–மந்திரி ஆனபோது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நன்றாக இருந்தது. பஞ்சாப் முதல்–மந்திரி அமரிந்தர் சிங், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வெற்றிபெற்ற போதெல்லாம் நன்றாக இருந்தது. நாட்டு மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கருதியதால் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லையா?
எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவிக்கிறது. உங்கள் தோல்வியை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பணிவுடன் சொல்லிக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறியதாவது:–
சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் அவர்கள் (காங்கிரஸ்) வெற்றிபெற்ற போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பிக்கைக்குரியதாக இருந்தது. ஆனால் அவர்கள் தோல்வி அடையும் சூழ்நிலையில் அந்த எந்திரங்கள் கேள்விக்குரியதாகிவிட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையில் பாசாங்கும், கேலித்தனமும் தெரிகிறது.
பா.ஜனதாவுக்கு சாதகமான எதிர்பார்ப்பு இருப்பதை எதிர்க்கட்சிகள் அப்பட்டமாக இழிவுபடுத்த முயற்சிப்பது இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். எதிர்க்கட்சிகள் அவர்களது தோல்வியால் மிகச் சிறியதாக தெரியவில்லை. ஆனால் அவர்களது கண்டன நடவடிக்கையால் தான் அப்படி தெரிகிறார்கள்.
இவ்வாறு நரசிம்ம ராவ் கூறினார்.