கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 22 May 2019 5:30 AM IST (Updated: 22 May 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி, 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014–ம் ஆண்டு மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்துமுடிந்து, நாளை (வியாழக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான 14 கருத்து கணிப்புகளில் 12, இந்த கூட்டணிக்கு 282 இடங்கள் முதல் 365 இடங்கள் வரை என முழு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அவரை கட்சித் தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்கள் சிவ்ராஜ்சிங் சவுகான், கிரிராஜ்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு தங்கள் சேவையை வழங்கிய மத்திய மந்திரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), ஹர்சிம்ரத் கவுர் (அகாலிதளம்), அனுபிரியா பட்டேல் (அப்ணாதள்) ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.

பின்னர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அமித்ஷா டுவிட்டரில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான பணிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக மோடி அரசுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியாவை நோக்கி பயணித்த இந்த தருணங்களை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் அமித்ஷா பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.

இந்த ஆலோசனை கூட்டம் மற்றும் விருந்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலையில் அமித்ஷா மத்திய மந்திரிகளை சந்தித்து 5 ஆண்டு சேவைக்காக நன்றி தெரிவித்தார்.


Next Story