ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண 22 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது


ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண 22 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது
x
தினத்தந்தி 22 May 2019 5:45 AM IST (Updated: 22 May 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுப்பதிவு எந்திரத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு. வாக்குஎண்ணிக்கையின்போது ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுடெல்லி, 

வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பதில் பழையபடி ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள ஒப்புகை சீட்டு எந்திரத்தை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது. இந்த ஒப்புகை சீட்டு வாக்களிக்கும் போது சில வினாடிகள் அந்த எந்திரத்தில் தெரியும். பின்னர் எந்திரத்துடன் உள்ள பெட்டியில் சேமிக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளை சேர்ந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. உதாரணத்துக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் இருந்தால் 30 வாக்குச்சாவடியில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு கடைசியில் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. ஆனால் இதை முதலில் எண்ண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல், அசோக் கெலாட், அபிஷேக் மனுசிங்வி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி சதீஷ்சந்திர மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓபிரெய்ன், சமாஜ்வாடி கட்சி ராம்கோபால் யாதவ், தி.மு.க. கனிமொழி எம்.பி., ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் மஜீத் மேமன், தேசிய மாநாட்டு கட்சி டேவிந்தர் ரானா உள்பட எதிர்க்கட்சியினர் பலர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஓட்டு எண்ணிக்கைக்கு பின்னர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத ஒரு அரசை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதோடு தேர்தல் கமிஷனை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும் முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து குலாம்நபி ஆசாத், சந்திரபாபு நாயுடு, சதீஷ் மிஸ்ரா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ராம் கோபால் யாதவ், கனிமொழி எம்.பி. உள்பட 22 கட்சி பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனை சந்தித்தனர்.

விவிபாட் கருவியின் ஒப்புகை சீட்டை எண்ணுவது மற்றும் சில மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் வாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாக வந்துள்ள புகார் உள்பட சில பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பின்னர் குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓட்டு எண்ணும்போது முதலில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். அதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் குறிப்பிட்ட அந்த சட்டமன்ற தொகுதியில் பதிவான அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்திரபாபு நாயுடு கூறும்போது, “வாக்களித்த நாட்டு மக்களின் கடமைக்கு தேர்தல் கமிஷன் உரிய மதிப்பளித்து ஓட்டு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்” என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் மிஸ்ரா கூறும்போது, “உத்தரபிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பல குளறுபடியான தகவல்கள் வருகின்றன. எனவே ஓட்டு எண்ணிக்கையின்போது மத்திய பாதுகாப்பு படைகளை பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.

இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் கமிஷன் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து தேர்தல் கமிஷன் எந்த உறுதிமொழியும் நேற்று அறிவிக்கவில்லை. இன்று(புதன்கிழமை) தேர்தல் கமிஷனர்கள் 3 பேரும் கூடி இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என்றும், அதன்பிறகே தேர்தல் கமிஷன் முடிவு தெரியவரும் என்றும் தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Next Story