பிரேசில் நாட்டு மாணவியை கற்பழித்த தொண்டு நிறுவன தலைவர் கைது


பிரேசில் நாட்டு மாணவியை கற்பழித்த தொண்டு நிறுவன தலைவர் கைது
x
தினத்தந்தி 22 May 2019 9:40 AM GMT (Updated: 22 May 2019 9:40 AM GMT)

பிரேசில் நாட்டு மாணவியை கற்பழித்த தொண்டு நிறுவன தலைவர் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் கப்பே பரேட் பகுதியில் வசித்து வருபவர் பத்மாகர் நந்தேகர் (வயது 52).  தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் இந்த பகுதியின் குடியிருப்புவாசிகளுக்கான கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரேசில் நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் படிப்பதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார்.  அவர் நந்தேகருடன் தங்கி இருந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15ந்தேதி ஓட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட வரும்படி மாணவியை நந்தேகர் அழைத்துள்ளார்.  அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவிக்கு கொடுத்துள்ளார்.  அதனை குடித்த மாணவி மயக்கம் அடைந்துள்ளார்.

இதன்பின் அவருடன் அங்கிருந்த அறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.  அடுத்த நாள் காலை கற்பழிக்கப்பட்டு இருப்பது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல் பந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள தனது இருப்பிடத்திற்கு திரும்பினார்.  அவர் சமீபத்தில் தனக்கு கார்டியனாக (பொறுப்பாளர்) இருப்பவரிடம் இந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரும் கப்பே பரேட் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.  இதன் தொடர்ச்சியாக நந்தேகர் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.  உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை மே 24ந்தேதி வரை போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து இந்த வழக்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story