தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க வழிமுறைகள் - சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தல்


தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க வழிமுறைகள் - சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 May 2019 3:00 AM IST (Updated: 23 May 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குமாறு சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தினார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் கூறி வருகின்றனர். இந்த கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று சில தகவல்களை வெளியிட்டார். சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்த கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.

அதன்படி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு வரையறை ஒன்றை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு சி.பி.எஸ்.ஐ.யை அறிவுறுத்திய அவர், இதன் மூலம் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதைப்போல கல்வி கட்டணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய ஜவடேகர், உடைகள், புத்தகம், எழுதுபொருட்கள் போன்றவற்றை குறிப்பிட்ட கடையில் இருந்துதான் வாங்க வேண்டும் என பெற்றோரை நிர்ப்பந்திக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்களது வங்கிக்கணக்கில் போட வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்களுக்கு பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தினார்.


Next Story