முழு பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2 தடவை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மோடி


முழு பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2 தடவை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 May 2019 5:39 AM IST (Updated: 24 May 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

முழு பெரும்பான்மையுடன், தொடர்ந்து 2–வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், இந்த தேர்தலிலும் பா.ஜனதா தொடர்ந்து 2–வது தடவையாக தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதுபோல், சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு 2 பிரதமர்கள்தான் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். ஜவகர்லால் நேரு, 1952, 1957, 1962 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

அதன்பின்னர், அவருடைய மகள் இந்திரா காந்தி, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

அவர்களுக்கு பின்னர், தொடர்ந்து 2–வது தடவையாக முழு பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய 3–வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமராக இருந்துள்ளார். இருப்பினும், அப்போது பா.ஜனதாவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாஜ்பாய், 1998–ம் ஆண்டு தேர்தல் பதவிக்காலத்தை முழுமையாக அனுபவிக்க இயலாமல், 13 மாதங்களிலேயே பதவி இழந்தார்.

மன்மோகன் சிங்கும் கூட்டணி பலத்தில்தான் 2 தடவை பிரதமராக இருந்தார்.

நேரு, இந்திரா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

அந்த கோணத்தில் பார்க்கும்போது, முழு பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2–வது தடவையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமை, மோடிக்கு கிடைத்துள்ளது.


Next Story