தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா? + "||" + Defeat in parliamentary elections: Will the Samajwadi-Bahujan Samaj Alliance be formed?

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா?

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா?
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, பரம எதிரிகளாக இருந்த அகிலேஷ் யாதவும் (சமாஜ்வாடி), மாயாவதியும் (பகுஜன் சமாஜ்) சேர்ந்து ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியுடன் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தனர். காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்க மறுத்த அவர்கள், ராகுல் மற்றும் சோனியா போட்டியிட்ட அமேதி, ரேபரேலி தொகுதிகளில் மட்டும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.


மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய லோக்தளம் முறையே 37 மற்றும் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தில் கூட, எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங், மாயாவதி இணைந்து கலந்துகொண்டனர்.

ஆனால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மெகா கூட்டணி உத்தரபிரதேசத்தில் தோல்வியையே தழுவி உள்ளது. வடமாநிலங்களை புரட்டிப்போட்ட மோடி சுனாமியில் இந்த கூட்டணியும் காணாமல் போனது. மாநிலத்தில் 62 இடங்களை பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சியான அப்னாதளம் 2 இடங்களையும் பெற்றன.

பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகள், சமாஜ்வாடி 5 இடங்கள் என வெறும் 15 இடங்களையே இந்த கூட்டணியால் பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சி ஓரிடத்தை கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வீசிய மோடி அலையின் மத்தியிலும் சமாஜ்வாடி கட்சி 5 இடங்களை பெற்றிருந்தது, பகுஜன் சமாஜால் அந்த தேர்தலில் வெற்றிக்கணக்கை தொடங்க முடியவில்லை.

நாடு முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை இந்த கூட்டணி இந்த தேர்தலில் சோபிக்க தவறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முதலாவதாக, அடிமட்ட அளவில் இரு கட்சிகளின் ஓட்டுகளும் எதிர்பார்த்த அளவுக்கு பரிமாறப்படவில்லை. குறிப்பாக, சமாஜ்வாடி ஓட்டுகள் பகுஜன் சமாஜ்வாடிக்கு மாறியபோதும், பகுஜன் சமாஜின் தலித் ஓட்டுகள் சமாஜ்வாடிக்கு போதிய அளவு கிடைக்கவில்லை.

அதேநேரம் முஸ்லிம் ஓட்டுகள் இந்த கூட்டணிக்கு கிடைத்தது. ஆனால் இரு கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டணி தோல்வியை தழுவி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கணித்து உள்ளனர்.

இதைப்போல காங்கிரசை இந்த கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாததும் மிகப்பெரும் சறுக்கலை கொடுத்து உள்ளது. ஏனெனில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களால் மெகா கூட்டணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. இது குறித்த விவாதங்கள் ஏற்கனவே கிளம்பியும் விட்டது.

பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறி வந்தார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களால் பாதிப்பு ஏற்பட்டது என்னவோ, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்குத்தான்.

இந்த கூட்டணியால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு லாபம் ஏற்பட்டு இருந்தாலும் சமாஜ்வாடிக்கு போதிய ஆதாயம் ஏற்படவில்லை. ஏனெனில் கடந்த தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெறாத பகுஜன் சமாஜ், இந்த தேர்தலில் 10 தொகுதிகளை பெற்று மாநிலத்தில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. அதேநேரம் சமாஜ்வாடியோ கடந்த தேர்தலைப்போல 5 இடங்களை மட்டுமே பெற்று இருக்கிறது. அதன் பாரம்பரிய தொகுதியான கன்னாஜை கூட அந்த கட்சி இழந்து விட்டது.

இந்த தோல்வியால் துவண்டு போயுள்ள இரு கட்சிகளின் தலைவர்களும் இதுவரை தேர்தல் முடிவுகள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இதில் மாயாவதியாவது தனது கட்சிக்கு வாக்களித்த சமாஜ்வாடி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் அகிலேஷ் யாதவோ இந்த பின்னடைவு குறித்து தொடர்ந்து மவுனமே சாதித்து வருகிறார்.

பகுஜன் சமாஜூடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டதை சமாஜ்வாடியின் நிறுவன தலைவரான முலாயம் சிங் தொடக்கத்திலேயே எதிர்த்தார். மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாடி வெறும் 37 தொகுதிகளில் போட்டியிடுவதை அவரால் ஏற்க முடியவில்லை. இதன் மூலம் கட்சி கரைந்து விடும் என அவர் கணித்து இருந்தார்.

அதைப்போலவே இந்த தேர்தலில் சமாஜ்வாடி பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. எனவே சமாஜ்வாடிக்குள் சலசலப்பு கிளம்பிவிட்டது. இதனால் இந்த மெகா கூட்டணி தொடருமா? என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.