ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு


ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 25 May 2019 11:41 PM GMT (Updated: 25 May 2019 11:41 PM GMT)

ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல், அவருடைய மனைவியுடன் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.

மும்பை, 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல். அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் அவர் இருந்தார். அவருடைய மனைவி அனிதா கோயல், நிர்வாக குழு உறுப்பினராக செயல்பட்டார்.

நிதி நெருக்கடி காரணமாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் அந்நிறுவனம் தடுமாறியது. இதையடுத்து அந்த நிறுவனம் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் வங்கிகளின் நெருக்கடியால் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். நிர்வாக குழு உறுப்பினராக இருந்த அவருடைய மனைவி அனிதா கோயலும் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கிரண் பவாஸ்கர் கடந்த மாதம் மும்பை போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பள பாக்கி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் நரேஷ் கோயல், தன் மனைவி அனிதா கோயலுடன் நேற்று துபாய் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது நரேஷ் கோயலையும், அவருடைய மனைவியையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததுடன், அவர்களை விமானத்தை விட்டு கீழே இறக்கினர்.

இருவர் மீதும் போலீசில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story