குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்கிறார்


குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்கிறார்
x
தினத்தந்தி 26 May 2019 1:04 PM GMT (Updated: 26 May 2019 1:04 PM GMT)

குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார்.

புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இதனை அடுத்து புதிய அரசை அமைக்கும் பணிகளில் பா.ஜனதா இறங்கி உள்ளது. அதன் ஒருபகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் (பிரதமர்), தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.  இதன்பின் அனைவரின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்ட பிரதமர் மோடி, மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார்.

இந்த கூட்டத்துக்குப்பின் பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து நாடாளுமன்ற குழு தலைவராக (பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார். அத்துடன் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களையும் வழங்கினார்.

அதன்பிறகு மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, புதிய அரசு அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார் என குடியரசு தலைவர் மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி 2-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.  தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது.  இந்த விழாவில் பங்கேற்கும்படி வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடப்படும் என கூறப்படுகிறது.  மோடிக்கு பிரதமராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Next Story