சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் - நரேந்திர மோடி


சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் - நரேந்திர மோடி
x
தினத்தந்தி 26 May 2019 3:27 PM GMT (Updated: 26 May 2019 8:58 PM GMT)

சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என்று நரேந்திர மோடி பேசினார்.

ஆமதாபாத்,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தாயாரிடம் ஆசிபெற குஜராத் சென்றுள்ள நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியுடன் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார். 

அதனைதொடர்ந்து ஆமதாபாத்தில் பாஜக அலுவலகம் அருகே நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-

சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
மாநில அரசுடன் தொடர்பில் உள்ளேன். பாஜகவின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். மக்களின் ஆசியே எனது பலம். தொண்டர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் கடின உழைப்பினால் வெற்றி கிடைத்துள்ளது. குஜராத் எப்போதும் எனக்கு துணை நிற்கிறது.

குஜராத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. தொழிற்சாலைகள் இங்கு அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

தேர்தல் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளோம். பாஜக 300 மேல் இடங்கள் கிடைக்கும் எனக் கூறியதை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தனர். அனைத்து சாதனைகளையும் பாஜக  முறியடித்துள்ளது. பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் மக்கள் ஓட்டளித்துள்ளனர். தற்போது கடமை அதிகரித்துள்ளது. இது மக்களின் தேர்தல், பாஜகவின் தேர்தல் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக  பாஜக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி தனது உரையை முடித்த பிறகு மக்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்கள் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தில் பாஜக தொண்டர்கள் முழக்கமிடுவது மேற்கு வங்கத்திற்கு கேட்க வேண்டும். குஜராத்தை இரு கை கூப்பி வணங்குகிறேன். மோடியை வரவேற்க எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் இங்கு கூடியுள்ளனர். பிரதமர் மோடியை உற்சாகபடுத்த இங்கு கூடியுள்ளோம். மோடிக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தொடர்ந்து குஜராத் உள்ளது. மோடி மீது வைத்த நம்பிக்கையை தேசம் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

Next Story