சிக்கிம் முதல்-மந்திரியாக பி.எஸ்.கோலே பதவியேற்பு


சிக்கிம் முதல்-மந்திரியாக பி.எஸ்.கோலே பதவியேற்பு
x
தினத்தந்தி 27 May 2019 8:45 PM GMT (Updated: 27 May 2019 7:54 PM GMT)

சிக்கிம் முதல்-மந்திரியாக பி.எஸ்.கோலே பதவியேற்றார். முதலாவதாக அரசு ஊழியர்களின் வேலை நாட்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

காங்டாக்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி மொத்தமுள்ள 32 இடங்களில் 17 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ந்து 5 முறை முதல்-மந்திரியாக இருந்த பவன்குமார் சாம்லிங்கின் சாதனை முடிவுக்கு வந்தது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து எஸ்.கே.எம். கட்சித்தலைவர் பிறேம்சிங் தமாங் என்ற பி.எஸ்.கோலே முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று தலைநகர் காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கங்கா பிரசாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பி.எஸ்.கோலே சட்டசபை தேர்தலில் போட்டியிடாததால், அவர் விரைவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சியினர் தெரிவித்தனர்.

முதல்-மந்திரியாக பதவியேற்றதும் முதல் அறிவிப்பாக, அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்கும் என்ற அறிவிப்பை பி.எஸ்.கோலே வெளியிட்டார். சிக்கிமில் அரசு ஊழியர்களுக்கு வார வேலை நாட்கள் குறைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story