ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்; 15 பாதுகாப்பு படையினர் காயம்


ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்; 15 பாதுகாப்பு படையினர் காயம்
x
தினத்தந்தி 28 May 2019 2:21 AM GMT (Updated: 28 May 2019 9:12 PM GMT)

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் குண்டுகளை வெடிக்கச் செய்து நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் காயம் அடைந்தனர்.

ராஞ்சி,

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஜார்கண்டும் ஒன்றாகும். அங்கு ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

செரைகேலா-கார்சவான் மாவட்டத்தில் உள்ள குச்சை வனப்பகுதியில் நேற்று அதிகாலை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஜார்கண்ட் ஆயுத போலீசார், மாவட்ட போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பாதையில் ஏற்கனவே பதித்து வைத்திருந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் இயக்கி வெடிக்க வைத்தனர். இந்த குண்டுகள் வெடித்ததால், அதில் சிக்கி, பாதுகாப்பு படையினர் 15 பேர் காயம் அடைந்தனர்.அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக தலைநகர் ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காயம் அடைந்தவர்களில் 13 பேர், மத்திய ரிசர்வ் படை போலீசார் ஆவர்.


Next Story