பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி


பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து  ராகுல்காந்தியை  சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி
x
தினத்தந்தி 28 May 2019 12:02 PM GMT (Updated: 28 May 2019 12:02 PM GMT)

பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மக்களவையில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்றால் கூட 55 இடங்கள் தேவைப்படும். 18 மாநிலங்களில் காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த தகவலும் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதற்கிடையே சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தி கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு ராகுல்காந்தியை சந்திக்க காத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க தொடர்ந்து இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி முயற்சித்து வருகிறார். ஆனால் ராகுல் காந்தி இன்னும் நேரம் ஒதுக்காமல் இருக்கிறார். தமிழக எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தூதுவர்களாக மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி.வேணுகோபால் ஆகிய இருவர் மட்டும் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

 ராகுலை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து  விவாதிக்க, இந்த வாரம் மீண்டும் காரிய குழு கூட்டத்தை கூட்டப்போவதாக தகவல் தெரிவித்தது. ஆனால் இதை காங்கிரஸ் மறுத்து உள்ளது.

காரிய கமிட்டி சந்திப்பின்போது, பிரியங்கா அல்லது சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யக் கூடாது என்றும் ராகுல் உத்தரவிட்டுள்ளாராம். நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்கள் இல்லாத போது காங்கிரஸ், சரியாக செயல்பட்டதில்லை என்பது வரலாறு.

இறுதி கட்ட முயற்சியாக ராகுல் காந்தியை சந்தித்து, பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்த, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா, அகமது பட்டேல் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், ராகுலின் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து இன்று தனது இல்லத்திற்கு கட்சியின் முக்கிய புள்ளிகளை வருமாறு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. 

Next Story