உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர், மருமகன் மர்ம நபர்களால் சுட்டு கொலை


உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர், மருமகன் மர்ம நபர்களால் சுட்டு கொலை
x
தினத்தந்தி 28 May 2019 12:46 PM GMT (Updated: 28 May 2019 12:46 PM GMT)

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அவரது மருமகன் மர்ம நபர்களால் இன்று மாலை சுட்டு கொல்லப்பட்டனர்.

பிஜ்னோர்,

உத்தர பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அரசியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  அங்கு அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் ஸ்மிரிதி இரானி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரசாரத்தில், இங்குள்ள பரவுலியா கிராம மக்களிடம் காலணிகள் வழங்கப்பட்டன.  இவற்றை வழங்கி ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளிப்படையாக குற்றச்சாட்டு எழுப்பினார்.

இந்த காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரான சுரேந்திரா சிங் (வயது 50) என்பவர் ஈடுபட்டார்.  இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட இவரை, கடந்த 26ந்தேதி இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்து விட்டார்.  அவரது இறுதி ஊர்வலத்தில் இரானி கலந்து கொண்டார்.

இந்த விவகாரத்தில், தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தருவேன் என இரானி கூறினார்.  இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அவரது மருமகன் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஹாஜி ஆசன் மற்றும் அவரது மருமகன் ஷடாப் ஆகியோர் கட்சி அலுவலகத்தில் இருந்தனர்.  அங்கு மாலை 3 மணியளவில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்களை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோடினர்.  இதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.  முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட பகையால் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில் தேர்தல் முடிந்த சில நாட்களில் தொடர்ந்து அரசியல் கட்சியினர் கொலை செய்யப்பட்டு வருவது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Next Story