தேசிய செய்திகள்

ராகுல் வீட்டுக்கு மூத்த தலைவர்கள் படையெடுப்பு: காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா? புதிய தகவல்கள் + "||" + To Rahul house senior leaders invasion: Will be Continue Congress be a leader? New information

ராகுல் வீட்டுக்கு மூத்த தலைவர்கள் படையெடுப்பு: காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா? புதிய தகவல்கள்

ராகுல் வீட்டுக்கு மூத்த தலைவர்கள் படையெடுப்பு: காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா? புதிய தகவல்கள்
ராகுல் காந்தி வீட்டுக்கு மூத்த தலைவர்கள் படையெடுத்து, ஆலோசனை நடத்தினர். அவர் காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களைக் கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.


தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 2 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.

தனது குடும்பத்தை சேர்ந்த யாரையும் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கக்கூடாது, தனது குடும்பத்துக்கு வெளியே இருந்து புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அவர் மூத்த தலைவர்களிடம் உறுதிபட தெரிவித்து உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முன்வந்திருப்பது தற்கொலை முடிவு என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் படையெடுத்தனர்.

முதலில் அங்கு அவரது சகோதரியும், கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வந்தார். அவர் ராகுலை சந்தித்து பேசினார். அடுத்து ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டும், அடுத்த சில நிமிடங்களில் அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டும், ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்களுடன் பிரியங்காவும் உடன் இருந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாதது ஏன் என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் பிரமோத்திவாரி ஆகியோரும் ராகுல் காந்தியை சந்தித்தனர்.

மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்திதான் கட்சிக்கு தலைமை ஏற்று தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி பிரமோத் திவாரி குறிப்பிடுகையில், “பதவி விலகுவதற்கு பதிலாக அனைத்து மட்டத்தில் உள்ள தலைவர்களின் ராஜினாமாவை பெற வேண்டும்; கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி, “தேர்தலில் மோடி வெற்றி பெற்றுவிட்டதால் பதவி விலக வேண்டும் என்பதில்லை. அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்பான ஒன்றுதான். எவ்வளவோ பார்த்து விட்டோம். பாரதீய ஜனதா கட்சி கொஞ்ச காலம் ஆட்டம் காட்டலாம். ஆனால் நீடித்து நிலைத்து நிற்க முடியாது. எனவே ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதி காட்டக்கூடாது. கட்சியை வழிநடத்த அவர்தான் மிகவும் தகுதியான தலைவர்” என கருத்து தெரிவித்தார்.

இப்படி தொடர்ந்து தலைவர்கள் வலியுறுத்தி வருவதால் ராகுல் காந்தி, தொடர்ந்து கட்சித் தலைவராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதில் பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை முறியடிக்க ராகுல் காந்தி நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நிலவி வருகிற கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கையை எடுப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தையும், கே.சி. வேணுகோபாலையும் அங்கு ராகுல் காந்தி நேற்று அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.