ஜூன் மாதம் 3 கட்டமாக வழங்க வேண்டும்: குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீர் - கர்நாடகம் திறந்துவிட காவிரி ஆணையம் உத்தரவு


ஜூன் மாதம் 3 கட்டமாக வழங்க வேண்டும்: குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீர் - கர்நாடகம் திறந்துவிட காவிரி ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 29 May 2019 12:15 AM GMT (Updated: 28 May 2019 10:23 PM GMT)

குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது.

தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ந்தேதி நடைபெற்றது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், தமிழக அரசின் தலைமை பொறியாளர் வி.செல்வராஜூ, காவிரி தொழில் நுட்ப குழு உறுப்பினர் எல்.பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

கர்நாடக அரசு தரப்பில் அம்மாநில நீர் வளத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், தலைமை பொறியாளர் பங்காரு சுவாமி ஆகியோர் பங்கேற்றனர். கேரளா தரப்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் டாக்டர் பி.அசோக் மற்றும் புதுச்சேரி அரசு தரப்பில் வளர்ச்சித்துறை செயலர் டாக்டர் ஏ.அன்பரசு ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில், இக்கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்த விவாதத்தை நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு நிலுவையில் உள்ள நிலையில் இத்திட்டம் குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தவறானது. மேகதாது அணைத்திட்டம் காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்த நிரலை விவாதத்தில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் இனிவரும் கூட்டங்களிலும் இப்பொருளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

அடுத்த பாசனப்பருவம் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்க உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடுவதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய 9.2 டி.எம்.சி. நீரையும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்ட நீரின் அளவை எவ்வித குறைபாடும் இன்றி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் ஒவ்வொரு மாதமும் திறந்து விட வேண்டிய 2.5 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குறைபாட்டு நீரின் அளவான 2 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் கர்நாடகா அரசு ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஜூன் மாதத்துக்கான தண்ணீரை 10 நாட்கள் என்ற இடைவெளியில் 3 முறையாக திறக்க வேண்டும் என்றும் பருவமழை காரணமாக ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அடுத்த கட்ட நீர் திறப்பு தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசின் வலியுறுத்தலை தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை.

கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் உத்தரவை நாங்கள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் போதிய அளவு மழைபெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்த உடன் இந்த உத்தரவு செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் கூறியதாவது;-

இக்கூட்டம் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக நிர்வாக ரீதியான பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து தொடர்பான விவரங்களை அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அனைத்து தரப்பினராலும் ஒருமித்த கருத்தோடு எடுக்கப்பட்டது. குறிப்பாக கர்நாடக அரசும் இந்த முடிவுக்கு இசைவு தெரிவித்தது.

ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடகா கட்டாயம் தண்ணீர் திறக்க வேண்டும். ஜூன் மாதத்துக்கான தண்ணீரை 10 நாட்கள் என்ற இடைவெளியில் 3 முறையாக கர்நாடகா திறக்க வேண்டும். அடுத்தகட்ட நீர் திறப்பு குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இக்கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை. இவ்வாறு ஆணைய தலைவர் மசூத் உசைன் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது;-

தமிழக அரசு தரப்பில் நாங்கள் 9.2 டி.எம்.சி. தண்ணீரை கோரினோம். ஆணையம் 9.19 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினோம். அது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கர்நாடகா அரசு முறையாக நிறைவேற்றும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம். இவ்வாறு எஸ்.கே.பிரபாகர் கூறினார்.

இக்கூட்டம் முடிவடைந்த பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைனை சந்தித்து நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். காவிரியின் கடை மடைக்கு தண்ணீர் இல்லை என்பதால், கூடுதல் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார்.


Next Story