கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க நடவடிக்கை: குமாரசாமியுடன் காங். மேலிட பொறுப்பாளர் ஆலோசனை


கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க நடவடிக்கை: குமாரசாமியுடன் காங். மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 29 May 2019 10:10 PM GMT (Updated: 29 May 2019 10:10 PM GMT)

கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து குமாரசாமியுடன் காங். மேலிட பொறுப்பாளர் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் ரமேஷ் ஜார்கிகோளியும், மந்திரி பதவி கிடைக்காததால் பி.சி.பட்டீல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுத்து ஆட்சியமைக்க ஏற்கனவே பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் கா்நாடகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதாவினர் முயற்சி செய்து வருகின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூரு விருந்தினர் மாளிகையில் முதல்-மந்திரி குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுப்பது குறித்தும், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Next Story