மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, கனிமொழி மாநிலங்களவை எம்.பி. பதவி முடிந்தது


மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, கனிமொழி மாநிலங்களவை எம்.பி. பதவி முடிந்தது
x
தினத்தந்தி 29 May 2019 11:00 PM GMT (Updated: 29 May 2019 10:43 PM GMT)

மக்களவைக்கு அமித் ஷா, ஸ்மிரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவுக்கு வந்துள்ளது.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, அந்த கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய மந்திரிகளுமான ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி, தி.மு.க.வின் கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகரிலும், ரவிசங்கர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னா சாகிப்பிலும், ஸ்மிரிதி இரானி உத்தரபிரதேசம்-அமேதியிலும், கனிமொழி தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலும் போட்டியிட்டனர்.

இவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர். இவர்கள் மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

இவர்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தாமாகவே முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தேதியிட்டு வெளியிட்டுள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

17-வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இந்த உறுப்பினர்கள், 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 69-ன் துணைப்பிரிவு 2 உடன் இணைந்த பிரிவு 67-ஏ மற்றும் பிரிவு 68-ன் துணைப்பிரிவு 4-ன் கீழ், தாங்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (அதாவது மே 23-ந்தேதி) முதல் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்து, மத்திய மந்திரிசபையில் இடம் பெறப்போகிற தலைவர்களுக்கு, அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி ஆகிய 3 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை பாரதீய ஜனதா கட்சி மேலிடம் வழங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக்ஜனசக்தி கட்சித்தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவார்; அவருக்கு பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருந்த ரவிசங்கர் பிரசாத்தின் இடத்தை பாரதீய ஜனதா மேலிடம் வழங்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story