ஆந்திரா: விஜயவாடாவில் சூறைக்காற்றுடன் கனமழை- பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் பாதிப்பு


ஆந்திரா: விஜயவாடாவில் சூறைக்காற்றுடன் கனமழை-  பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2019 2:56 AM GMT (Updated: 30 May 2019 2:56 AM GMT)

ஆந்திர முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.

அமராவதி,

மக்களவை தேர்தலுடன், ஆந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., 151-ல் வென்றது. சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம், 23-ல் மட்டும் வென்று, படுதோல்வி அடைந்தது. நடிகர் பவன் கல்யாணின், ஜனசேனா, ஒரு தொகுதியில் வென்றது. 

சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, இன்று முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.  இன்று நண்பகல், 12:30 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வராகப் பதவியேற்கிறார், ஜூன் 6 ஆம் தேதி கேபினட் பதவியேற்கும் என்று கூறப்படுகிறது. விஜயவாடாவில் பதவியேற்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையே, நேற்று இரவு, அங்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. நள்ளிரவில் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக, ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியதோடு, விழா மேடை, பந்தல் மற்றும் சேர்களும் பலத்த சேதமடைந்தன.  சேதம் அடைந்த பந்தல்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

முதல் மந்திரியாக பதவியேற்றதும் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.
ஜெகன் மோகன் ரெட்டி, பதவியேற்கும் விழாவில், சந்திரபாபு நாயுடு பங்கேற்க போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் குழு, ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவின் வாழ்த்து கடிதத்தையும் இக்குழு அவரிடம் வழங்க உள்ளது. முன்னதாக பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெகன்மோகன் தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம்  அழைப்பு விடுத்திருந்தார்.

Next Story