மோடி அரசில் எந்த காலத்திலும் சேர மாட்டோம் - நிதிஷ் குமார் பரபரப்பு பேட்டி


மோடி அரசில் எந்த காலத்திலும் சேர மாட்டோம் - நிதிஷ் குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 31 May 2019 10:09 PM GMT (Updated: 31 May 2019 10:09 PM GMT)

மோடி அரசில் எந்த காலத்திலும் சேர மாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

நரேந்திர மோடி அரசில், ஒரு மந்திரி பதவி மட்டுமே அளிக்க முன்வந்ததால், ஐக்கிய ஜனதாதளம் அதில் இடம்பெற மறுத்து விட்டது. இந்நிலையில், மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்று விட்டு, பாட்னாவுக்கு திரும்பிய பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

கடந்த 28-ந் தேதி, என்னை சந்திக்க அமித் ஷா விருப்பம் தெரிவித்தார். அப்படி சந்தித்தபோது, மோடி அரசில், கூட்டணி கட்சிகளுக்கு அடையாள பிரதிநிதித்துவமாக ஒரு மந்திரி பதவி மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். நான் கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்தேன். அதன்படி விவாதித்தபோது, பெரும்பாலானோர், மந்திரிசபையில் சேர வேண்டாம் என்று கூறினர். அந்த முடிவை அமித் ஷாவிடம் தெரிவித்தோம். அவர் மறுநாளும் என்னை தொடர்பு கொண்டு வற்புறுத்தினார். நான் மறுத்து விட்டேன். பா.ஜனதா பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவிடமும் அதே தகவலை சொன்னேன்.

இந்த முடிவு எதிர்காலத்துக்கும் பொருந்தும். எதிர்காலத்திலும் அரசில் சேர மாட்டோம். ஆனால், பா.ஜனதா கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். கட்சிகளின் எம்.பி. எண்ணிக்கைக்கு ஏற்ப மந்திரி பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அடையாள பிரதிநிதித்துவம் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story