சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி கர்நாடக மந்திரிசபை இந்த வாரம் விஸ்தரிப்பு


சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி கர்நாடக மந்திரிசபை இந்த வாரம் விஸ்தரிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 12:00 AM IST (Updated: 2 Jun 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டணி அரசு

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, ‘ஆபரேஷன் தாமரை’யை பா.ஜனதா கையில் எடுத்தது. சில எம்.எல்.ஏ.க்களை இழுத்து, அதன் மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்தது. ஓராண்டாக நடைபெற்ற இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, பா.ஜனதா தலைவர்கள் தேர்தலில் கவனம் செலுத்தினர். இதில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 22 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜனதா வெற்றி பெற்றால், கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜனதா அரசு அமையும் என்று பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கூறினர்.

கூட்டணி அரசுக்கு ஆபத்து

கூட்டணி அரசை தக்கவைக்க முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த சுமார் 12 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாயின. மேலும் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களை நேரில் சந்தித்து பேசினர். கர்நாடக அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது.

மந்திரிசபை விரிவாக்கம்

இந்த நிலையில் ஆட்சியை பாதுகாக்கும் பொருட்டு, முதல்கட்டமாக மந்திரிசபையில் உள்ள 3 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மந்திரிசபையில் முதல்-மந்திரி உள்பட 34 மந்திரிகள் இருக்க வேண்டும். தற்போது 31 பேர் உள்ளனர். 3 இடங்கள் காலியாக உள்ளன.

அதில் 2 இடங்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் உரியவை ஆகும். மந்திரிசபை விரிவாக்கம் இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரமேஷ் ஜார்கிகோளி

இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஷ் மற்றும் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல் அல்லது ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய இருவரில் ஒருவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story