8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர் நிதிஷ் குமார் மந்திரிசபை விஸ்தரிப்பில் பா.ஜனதாவுக்கு இடம் இல்லை மோடி அரசின் செயலுக்கு பதிலடியா?


8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர் நிதிஷ் குமார் மந்திரிசபை விஸ்தரிப்பில் பா.ஜனதாவுக்கு இடம் இல்லை மோடி அரசின் செயலுக்கு பதிலடியா?
x
தினத்தந்தி 3 Jun 2019 5:00 AM IST (Updated: 3 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

நிதிஷ் குமார் மந்திரிசபை விஸ்தரிப்பில் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். பா.ஜனதா சார்பில் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது மோடி அரசின் செயலுக்கு பதிலடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாட்னா, 

நிதிஷ் குமார் மந்திரிசபை விஸ்தரிப்பில் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். பா.ஜனதா சார்பில் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது மோடி அரசின் செயலுக்கு பதிலடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஸ்தரிப்பு

கடந்த 2017-ம் ஆண்டு, பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளத்துடனான கூட்டணியை முதல்- மந்திரி நிதிஷ் குமார் முறித்துக்கொண்டார். பா.ஜனதாவுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைத்தார். அதன்பிறகு அவரது மந்திரிசபைவிஸ்தரிக்கப்படவில்லை.

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மந்திரிகள் ராஜீவ் ரஞ்சன் சிங், தினேஷ் சந்திர யாதவ், பசுபதி குமார் பராஸ் ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தங்களது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், முசாபர்பூர் காப்பக கற்பழிப்பு வழக்கில் சிக்கிய பெண் மந்திரி மஞ்சு வர்மாவும் பதவி விலகிவிட்டார். 4 காலியிடங்கள் ஏற்பட்டதால், முதல்முறையாக நேற்று நிதிஷ் குமார் அரசு விஸ்தரிக்கப்பட்டது.

பதவி ஏற்பு விழா

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். 8 பேருக்கும் கவர்னர் லால்ஜி தாண்டன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

நரேந்திர நாராயணன் யாதவ், சஞ்சய் ஜா, அசோக் குமார் சவுத்ரி, ராம்சேவக் சிங், ஷ்யாம் ரஜாக், நீரஜ் குமார், லட்சமேஷ்வர் ராய், விமா பாரதி ஆகிய 8 பேரும் புதிய மந்திரிகள் ஆவர்.

இவர்களில் நீரஜ் குமார், சஞ்சய் ஜா, அசோக்குமார் சவுத்ரி ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர். சஞ்சய் ஜா, நீரஜ் குமார், ராம்சேவக் சிங், லட்சுமேஷ்வர் ராய் ஆகியோர் முதல்முறையாக மந்திரி ஆகியுள்ளனர்.

நிகழ்ச்சியில், முதல்-மந்திரி நிதிஷ் குமார், பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி, சபாநாயகர் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பா.ஜனதாவுக்கு இடம் இல்லை

பதவி ஏற்ற 8 பேரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்கள். கூட்டணி கட்சியான பா.ஜனதாவை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி அளிக்கப்படவில்லை.

கடந்த வாரம், பிரதமராக மோடி 2-வது தடவை பதவி ஏற்றபோது, ஐக்கிய ஜனதாதளம் அதில் இடம்பெறவில்லை. ஒரே ஒரு மந்திரி பதவி மட்டுமே அளிக்க பா.ஜனதா முன்வந்ததால், மத்திய மந்திரிசபையில் சேர ஐக்கிய ஜனதாதளம் மறுத்துவிட்டது.

அந்த நிகழ்வுக்கு பதிலடியாக, பீகார் மந்திரிசபை விஸ்தரிப்பில் பா.ஜனதா புறக்கணிக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், மோடி அரசு பாணியில், பீகார் மந்திரிசபை விஸ்தரிப்பில் பா.ஜனதாவுக்கு நிதிஷ் குமார் ஒரு இடம் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அந்த வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்று பா.ஜனதா இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவுக்கு பிறகு பேட்டி அளித்த நிதிஷ் குமார், “எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. எந்த கட்சிக்கு எத்தனை மந்திரி பதவி, எந்த துறை என்பது கூட்டணி அமைந்தபோதே முடிவு செய்யப்பட்டு விட்டது” என்று கூறினார்.

Next Story