காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அவசர உத்தரவு


காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அவசர உத்தரவு
x
தினத்தந்தி 3 Jun 2019 5:30 AM GMT (Updated: 3 Jun 2019 5:30 AM GMT)

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அவசர உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 5 நாட்கள் நீடித்த  இந்த நிலை  மீண்டும் சீரானது.  தொடர்ந்து தனது கட்சி  பணிகளை கவனிக்க தொடங்கினார்.

 புதிய எம்.பி.க்களின் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. கட்சியின் மாநிலங்களவை மற்றும் காரியக்கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் வாக்குச்சாவடி வாரியாக பெற்ற வாக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் வேட்பாளர்களை, அக்கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வேட்பாளர்களும் தாங்கள் பெற்ற வாக்குகளை, வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கும்படி காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 20-ல் அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் 7ஆம் தேதிக்குள் இந்த விவரங்கள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story