ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...!


ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...!
x
தினத்தந்தி 3 Jun 2019 2:57 PM IST (Updated: 3 Jun 2019 2:57 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட  இளம்பெண் லதீஷா, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வு எழுதும் புகைப்படம் சமூகவலைதளங்களில் பாராட்டுகளுடன் பகிரப்பட்டு வருகிறது. 24 வயதாகும் லதீஷா அன்சாரி கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் பிறக்கும் போதே அரிதான எலும்பு நோய் பாதிப்பில் அவதிப்பட்டார். அவரை மிகவும் சிரமத்துடனே பெற்றோர்கள் வளர்த்தனர். லதீஷா பள்ளிக்கு செல்லும் போது அவருடைய தந்தை மிகவும் உதவியாக இருந்தார். லதீஷாவுக்கு நுரையீரல் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளது, எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் அவரால் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. தேர்வை லதீஷா திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எழுதினார். வழக்கமான சக்கர நாற்காலியின் பின்புறத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொறுத்தப்பட்ட நிலையில் லதீஷா தேர்வு எழுதினார். லதீஷாவுக்கு இது முதல் தேர்வாகும். அவர் எம்.காம் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். விருப்ப மொழியாக மலையாளம் தேர்வு செய்துள்ளார். தேர்வு அறையில் தேவையான உதவிகளை செய்து கொடுத்த கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பிஆர் சுதீர் பாபுவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மாணவி லதீஷாவுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக செய்துக் கொடுத்துள்ளார் ஆட்சியர் சுதீர் பாபு. கடந்த ஒன்றரை ஆண்டாக தேர்வுக்காக படித்துள்ளேன், எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முடிவுகள் வரும் என நம்பிக்கை இருக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் லதீஷா.
 
அரிதான மரபணு கோளாறு கொண்ட குழந்தைகளுக்காக பணியாற்றி வரும் சமூக ஆர்வலர் லதா நாயர் பேசுகையில், லதீஷா போன்றவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) உதவிகளை செய்ய வேண்டும். லதீஷாவிற்கு மருத்துவ உதவிகளுக்கு மட்டும் மாதம் ரூ. 25 ஆயிரம் தேவைப்படும் எனக் கூறியுள்ளார். முயற்சி இருந்தால் மட்டுமே மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கையுடன் தேர்வை எழுதியுள்ள லதீஷா வெற்றிப்பெற பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



லதீஷா சிறந்த ஓவியரும் கூட. வியக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து, பல வண்ணங்களை தீட்டியுள்ளார். அவருடைய ஓவியங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக உள்ளது. இணையதளம் மூலமாகதான் இதனைக் கற்றுக்கொண்டேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 


Next Story