வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மம்தா பானர்ஜி யோசனை எதிர்க்கட்சிகள் ஒன்றாக குரல் கொடுக்குமாறு வேண்டுகோள்


வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மம்தா பானர்ஜி யோசனை எதிர்க்கட்சிகள் ஒன்றாக குரல் கொடுக்குமாறு வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த பின்னடைவு குறித்து விவாதிக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள் கூட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கூட்டினார். கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர், மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை நாங்கள் விரும்பவில்லை. ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விவரங்களை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.

இதற்காக ஒரு போராட்ட இயக்கம் தொடங்கப் போகிறோம். அதை மேற்கு வங்காளத்தில் இருந்து தொடங்குவோம்.

குரல் கொடுக்க வேண்டும்

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள 23 கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு நீங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் கூட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தடை செய்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில், பணம், ஆள்பலம், அமைப்புகள், ஊடகம், அரசாங்கம் ஆகியவற்றை பயன்படுத்தித்தான் பா.ஜனதா வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடதுசாரி கூட்டணியே காரணம். இருப்பினும், எங்கள் ஓட்டு வங்கியை 4 சதவீதம் அதிகரித்துள்ளோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Next Story