ஸ்மிரிதி இரானி மத்திய மந்திரியாக பொறுப்பு ஏற்றார் பெண்கள் மேம்பாட்டை ஊக்குவிப்பேன் என அறிவிப்பு
ஸ்மிரிதி இரானி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரியாக பொறுப்பு ஏற்றார். பெண்கள் மேம்பாட்டை ஊக்குவிப்பேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்ததன் மூலம் பா.ஜனதாவின் ஸ்மிரிதி இரானி மாபெரும் வெற்றியாளராக கருதப்படுகிறார். அவருக்கு பிரதமர் மோடி தலைமையிலான 2-வது மந்திரி சபையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் முன்பு வகித்த ஜவுளித்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அவர் இத்துறையின் முன்னாள் மந்திரி மேனகா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், இத்துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகள், அவற்றை எப்படி சரிசெய்து முன்னெடுத்துச் செல்வது என்ற ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
பெண்கள் மேம்பாடு
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதற்காக அலுவலகத்துக்கு வந்த அவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை மந்திரி தேவஸ்ரீ சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் டுவிட்டர் வலைத்தளத்தில், “தன் மீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளதற்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும், பெண்கள் தலைமையிலான மேம்பாட்டை ஊக்குவிக்கவும் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். பெண்கள் மேம்பாடு அடையவும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story