கேபினட் மந்திரி அந்தஸ்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்


கேபினட் மந்திரி அந்தஸ்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:10 AM IST (Updated: 4 Jun 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல், கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 2-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார். இவரது நியமனத்துக்கு நியமனங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. அவருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

5 ஆண்டுகள்

அதையடுத்து, இதுதொடர்பான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதில், “மே 31-ந்தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் அஜித் தோவல் நீடிப்பார். அவரது பதவிக்காலம், பிரதமரின் பதவிக்காலத்துடன் இணைந்ததாக இருக்கும். இந்த பதவிக்காலத்தில், அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து அளிக்கப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். தேச பாதுகாப்பு விவகாரங்களில் அவர் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

பாராட்டுகள் பெற்றவர்

அஜித் தோவல், 1968-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனவர். சில ஆண்டுகள் போலீஸ் பணிக்கு பிறகு, 33 ஆண்டுகள் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிந்துள்ளார். உளவுத்துறை இயக்குனராக 2004-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். உளவுத்துறை வட்டாரங்களில் மூளைபலம் மிகுந்தவராக அறியப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு, சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிகழ்வுகள், அஜித் தோவலின் கண்காணிப்பிலேயே நடத்தப்பட்டன.

மேலும், 1999-ம் ஆண்டு, இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்றுள்ளார்.

Next Story