13-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்


13-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்
x
தினத்தந்தி 5 Jun 2019 2:01 AM IST (Updated: 5 Jun 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

13-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவரிடம் வெளிநாட்டில் சொத்துகள் வாங்கியது பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்து துபாயில் ரூ.14 கோடியில் ஒரு வில்லாவும், லண்டனில் பிரையான்ஸ்டன் சதுக்கத்தில் ரூ.26 கோடியில் சொகுசு குடியிருப்பும் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவர் 13-வது முறையாக டெல்லியில் இந்தியா கேட் அருகே அமைந்துள்ள அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அதிகாரிகள் பதில் பெற்றனர்.

முன்னதாக சமூக வலைத்தளத்தில் ராபர்ட் வதேரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 80 மணி நேரம் தன்னிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், எத்தனையோ கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ நான் ஒரு தனித்துவமான நபர். அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகள் மீது ஏறத்தாழ 10 ஆண்டு காலமாக நான் போராடி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Next Story