ஒடிசா மாநிலம்: பானி புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் இருளில் தவிக்கும் 1½ லட்சம் வீடுகள்


ஒடிசா மாநிலம்: பானி புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் இருளில் தவிக்கும் 1½ லட்சம் வீடுகள்
x
தினத்தந்தி 5 Jun 2019 2:12 AM IST (Updated: 5 Jun 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் பானி புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் 1½ லட்சம் வீடுகள் இருளில் தவிக்கின்றன.

புவனேசுவரம்,

சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவான பானி புயல், பாதை மாறிச் சென்று ஒடிசாவில் கடந்த மாதம் 3-ந் தேதி தாக்கியது.

அதிகபட்சமாக மணிக்கு 175-200 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக் கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. 14 மாவட்டங்களில் 1 கோடியே 65 லட்சம் பேர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர்.

அங்கு பூரி மாவட்டம்தான் மிகுந்த பாதிப்புக்கு ஆளானது. 64 பேர் பலியானதில், 39 பேர் பூரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் முழுவதும் 25 லட்சத்து 1,131 வீடுகளில் மின்வினியோகம் பாதித்து இருளில் மூழ்கின. இதில் 23 லட்சத்து 36 ஆயிரத்து 584 வீடுகளில் மின்வினியோகம் சீரானது.

பூரி மாவட்டத்தில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 171 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 52 சதவீதம் வீடுகளில் மின்வினியோகம் சீராகி விட்டது.

இன்னும் சுமார் 1 லட்சத்து 64 ஆயிரம் வீடுகள் இருளில் தவிப்பது தொடர்கதை ஆகி உள்ளது. இந்த வீடுகளில் வசிக்கிற மக்களின் அன்றாட வாழ்க்கை, மின்வினியோகம் இன்றி பரிதாபமாக உள்ளது.

இதையொட்டி, பூரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை மந்திரி சமீர் ரஞ்சன் தாஸ் கூறும்போது, “பூரி மாவட்டத்தில் இன்னும் இருளில் தவிக்கிற வீடுகளுக்கு மீண்டும் மின்வினியோகம் செய்வதற்கு தேவையான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன” என்றார்.

கோடை விடுமுறை 19-ந் தேதி முடிவதால், சேதம் அடைந்த பள்ளிக்கூட கட்டிடங்களை விரைவாக சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மின்வினியோகத்தை ஜூன் மாதத்திற்குள் முழுமையாக சீர்செய்வதற்கு முடிவு செய்திருந்தாலும், இந்தத் தேதிக்குள் சரி செய்ய வேண்டும் என்று காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story